“சுரங்க ஏலம் ரத்து; முதல்வருக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

By செய்திப்பிரிவு

சென்னை: நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளது ‘டெல்டாக்காரராக முதல்வருக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,“காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதல்வருக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி. விவசாயம் காப்போம்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE