தற்கொலைக்குத் தூண்டும் நீட் பயிற்சி மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: மன உளைச்சலை ஏற்படுத்தி மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் பயிற்சி மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டதற்கு நீட் தேர்வு குறித்த அச்சம் ஒரு காரணம் என்றால், தனியார் பயிற்சி நிறுவனம் ஏற்படுத்திய மன உளைச்சல் தான் அதைவிட முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது. நீட் பயிற்சி அளிப்பதாக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள், மாணவர்களை தற்கொலைக்குத் தள்ளுவது கண்டிக்கத்தக்கது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்த என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளியான உத்திராபதியின் மகள் நிஷா, கடந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன், நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக அவர் தயாராகி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை வடலூரில் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு நீட் தேர்வு குறித்த அச்சத்தையும் கடந்து, தனியார் பயிற்சி மையம் ஏற்படுத்திய மன உளைச்சல் தான் முதன்மைக் காரணம் என்று இப்போது தெரியவந்திருக்கிறது.

நிஷா படித்து வந்த தனியார் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு அந்த பயிற்சி மைய அளவில் ஓர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட அந்தத் தேர்வில் 400 மற்றும் அதற்கும் கூடுதலாக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர் மட்டும் தனிக்குழுவாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

அந்தத் தேர்வில் நிஷா 399 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால், அவர் தனிப்பயிற்சிக் குழுவில் சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி, 400க்கும் குறைவாக மதிப்பெண்களை பெற்ற நிஷா உள்ளிட்டோர் நடப்பாண்டு நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று பயிற்சி மைய ஆசிரியர்களும், நிர்வாகிகளும் கூறி வந்ததால் நிஷா மன உளைச்சல் அடைந்ததாகவும், அது தான் மாணவி நிஷாவின் தற்கொலைக்கு முதன்மையான காரணம் என்று பல்வேறு தரப்பிலும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி நிஷாவின் பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது மாணவி நிஷாவின் தற்கொலைக்கான காரணங்களை அவர்களிடமும் உறுதி செய்து கொண்டேன். தனியார் பயிற்சி மையத்தின் இத்தகைய அணுகுமுறை காரணமாக நடப்பாண்டில் மட்டும் நெய்வேலி நகரியத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தமிழக மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வு என்பது முற்றிலும் புதிதானது ஆகும். அதை எழுத தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் மாணவ, மாணவியர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்கின்றனர். பயிற்சி மையத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவ, மாணவியரில் ஒரு பிரிவினர் 400க்கும் கூடுதலான மதிப்பெண்களும், இன்னொரு பிரிவினர் 400க்கும் குறைவான மதிப்பெண்களும் எடுத்திருந்தால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதும், அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்குவதும் தனிப்பயிற்சி மையத்தின் கடமை. அதற்காகத் தான் அவர்களிடமிருந்து பயிற்சி மையங்கள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன.

அதற்கு மாறாக, குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக மாணவர்களை சிறுமைப்படுத்தும் நோக்குடன் நடந்து கொள்வதும், மன உளைச்சலை ஏற்படுத்துவதும் மன்னிக்க முடியாதவை. மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் சேரும் மாணவ, மாணவியரை பயிற்சி மையங்கள் மரணத்தை நோக்கி அனுப்பக் கூடாது. மாணவி நிஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுத்து செயல்படுத்த வேண்டும். பயிற்சி மையங்களும் மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமே தவிர, அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டும் செயல்களில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது.

இவை அனைத்துக்கும் மேலாக, மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்துடன், விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக தமிழக அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்