தினசரி மின் பயன்பாடு 18,252 மெகாவாட்டாக உயர்வு - தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரிப்பால், தினசரி மின்நுகர்வு 18,252 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 2.67 கோடி மின்நுகர்வோர் உள்ளனர். விவசாயத்துக்கு தேவைப்படும் 2,500 மெகாவாட் உட்பட மாநிலத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாக குறையும்.

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

1.50 லட்சம் விவசாய மின்இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதால், விவசாயப் பிரிவில் மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த மார்ச்
4-ம் தேதி தினசரி மின்தேவை முதல்முறையாக 17,584 மெகாவாட்டாக அதிகரித்தது. இதற்கு முன்பு கடந்த 2022 ஏப்.29-ம் தேதி 17,563 மெகாவாட் என்பதே அதிகபட்சமாக இருந்தது.

இந்த சூழலில், விவசாயத்துக்கான 18 மணி நேர மின்விநியோகம், பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் தொடங்கியது போன்ற காரணங்களால், மார்ச் 15-ம் தேதி 17,647 மெகாவாட், மார்ச்
16-ம் தேதி 18,053 மெகாவாட் என மின்பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தினசரி மின்நுகர்வு 18,252 மெகாவாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எந்த மின்தடையும் இல்லாமல், இந்த உச்சபட்ச மின்தேவை ஈடுசெய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் பதிவில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியபோது, ‘‘கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட்டை தாண்டிய நிலையில், வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். இதனால், தினசரி மின்தேவை 19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்கும் என தெரிகிறது. அதிகரிக்கும் மின்தேவையை பூர்த்தி செய்ய, மின்வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE