மாநில அரசின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு பாராட்டு - முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மக்கள் குறைதீர்ப்பு தொடர்பான செயல்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவித்து, நல்லாட்சி வார நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஒய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த மார்ச் 27ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடித்தில், மத்திய அமைச்சகம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு டிச.19 முதல் 25 வரை நடைபெற்ற நல்லாட்சி வாரம் நிகழ்ச்சியில், மக்கள் குறை தீர்ப்பதில் தமிழக அரசின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். மேலும், நல்லாட்சி வார நிகழ்ச்சியில் தமிழக அரசின் முன்னெடுப்புகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தாய்மையுடன் நாம்" செயலி: அரியலூரில் உள்ள 32 மாவட்ட விடுதிகளில் வருகைப்பதிவை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ‘பேசர் ( FAZER)’ செயலி மூலம் முக அடையாள வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களின் சுகாதாரச்செயல்பாட்டில் மாற்றம், மெய்நிகர்ப் பராமரிப்பு ஆதரவு மற்றும் நிகழ்நேர அறிக்கைகளை வழங்குவதற்காக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட "தாய்மையுடன் நாம்" செயலிக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, கடன்கள் வழங்கப்பட்டதற்கும், வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கும், 384 ஊராட்சிகளில் உள்ள அரசுக் கட்டிடங்களில் 1,525 சுற்றுக் கிணறுகள் அமைக்கப்பட்டு 7 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டதற்காகவும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் குறைகளைக் கண்காணிக்கவும், தீர்க்கவும் விருதுநகர் மாவட்டத்தில் குரல் வழி, வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் வாட்ஸ்அப் சாட்பாக்ஸ் ‘விரு VIRU' செயலியும், திருநெல்வேலி மாவட்டத்தில், ‘வணக்கம் நெல்லை’யும் அறிமுகப்படுத்தப் பட்டதற்காகவும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்களுக்கு முன்னுரிமை நல்லாட்சி வாரத்தின்போது, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வாழ்வாதாரம் வழங்குவது, ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு குறை தீர்க்கும் மனுக்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு கண்டுள்ளார்.

சென்னை மாவட்ட மக்கள் திருப்தியடையும் வகையில், சான்றிதழ் வழங்குதல் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. கான்கிரீட் வீடுகள் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்த பனப்பள்ளி மலைவாழ் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கொடுக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பசுமை வீடு திட்டத்தின் கீழ் 18 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இவற்றுக்காக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசால் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு – (CGPRAM) வாயிலாக 32,852 மனுக்களுக்கும், மாநில குறை தீர்க்கும் இணையதளத்தின் வாயிலாக 1,08,658 மனுக்களுக்கும், சேவை வழங்கல் கீழ் 2,92,701 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ள மத்திய அமைச்சர், நல்லாட்சி வார நிகழ்ச்சியில் மாநில அரசின் ஒத்துழைப்புக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE