பிரதமர் மோடி இன்று சென்னை வருகை - 22,000 போலீஸாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். சென்னை - கோவை ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் அவர், ரூ.3,700 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். சென்னை - கோவை இடையே ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. இந்த சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் இன்று பகல் 1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பின்னர், சென்னை புதிய விமான நிலையத்துக்கு வரும் பிரதமர், புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

மாலை 3.25 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் செல்லும் பிரதமர் மோடி, மாலை 4 மணிக்கு சென்னை - கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர், முதல்வர், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பின்னர், பிரதமர் மோடி மாலை 4.25 மணிக்கு சென்ட்ரலில் இருந்து கார் மூலம் மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் செல்கிறார். அங்கு நடைபெறும் சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர், மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்கு காரில் சென்று, விமானப் படை ஹெலிகாப்டரில் விமான நிலையம் செல்கிறார்.

மாலை 6.30 மணிக்கு பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்துக்கு காரில் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார். ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அங்கிருந்து விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி இரவு 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு புறப்பட்டு செல்கிறார். மைசூருவில் இன்று இரவு தங்கும் பிரதமர், நாளை சாலை மார்க்கமாக பந்திப்பூர் சரணாலயம், முதுமலை யானைகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-ம் ஆண்டு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தின் நாயகர்களான பொம்மன் - பெள்ளியை சந்தித்து பாராட்டுவார் என்றும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், பல்லாவரம் அல்ஸ்டாம் மைதானம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் கூடுதல், இணை, துணை, உதவி ஆணையர்கள், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு, ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் அடையாறு, பல்லவன் சாலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரை வரவேற்க, தமிழக பாஜக சார்பில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால், இதுவரை பிரதமரிடம் இருந்து தகவல் இல்லை என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE