உண்மையை மறைத்த எல்ஐசி-க்கு ரூ.2 லட்சம் அபராதம்: சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: நீதிமன்றத்தில் உண்மையை மறைத்ததாக எல்ஐசி-க்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகாசியைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன். இவர் எல்ஐசி-யில் 1984ல் எழுத்தராக பணியில் சேரந்தார். அப்போது நெல்லை வருவாய்த்துறை அதிகாரிகள் 1982-ல் வழங்கிய சாதி சான்றிதழை வழங்கியிருந்தார். இந்த சாதி சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய நெல்லை மாவட்ட ஆட்சியரை எல்ஐசி கேட்டுக்கொண்டது. பின்னர் கார்த்திக்கேயனின் சாதி சான்றிதழ் உண்மையானதுதான் என நெல்லை ஆட்சியர் 20.4.1990-ல் அறிக்கை அளித்தார்.

இந்நிலையில், கார்த்திக்கேயனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டபோது அவரது சாதி சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய மாநில எஸ்சி, எஸ்டி சாதி சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கு எல்ஐசி கடிதம் அனுப்பியது. இதற்கு மாநில சாதி சான்றிதழ் சரிபார்ப்புக் குழு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் கார்த்திக்கேயனின் சாதி சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய மறுத்து மாநில சாதி சான்றிதழ் சரிபார்ப்பு குழு 2019-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சாதி சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடக் கோரி எல்ஐசி மதுரை மண்டல முதுநிலை மேலாளர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவு: ''கார்த்திகேயனின் சாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை சாதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுவிட்டால் மீண்டும் மீண்டும் சாதி சான்றிதழை சரிபார்க்க வேண்டும் என்ற பெயரில் தொந்தரவு கொடுக்கக் கூடாது. கார்த்திகேயனின் சாதிச் சான்று 1990-ல் சரிபார்க்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை வழக்கில் எல்ஐசி மறைத்துள்ளது.

எல்ஐசி ஒரு மதிப்புமிகு நிறுவனம். அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் உண்மையை மறைத்துள்ளது. இதற்காக எல்ஐசி-க்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு வழங்க வேண்டும். இப்பணத்தை வழக்கின் பிரமாணப் பத்திரம் தயார் செய்த அதிகாரிகளிடம் வசூலித்துக் கொள்ளலாம். கார்த்திகேயனுக்கு சேர வேண்டிய ஓய்வு கால பலன்கள் அனைத்தையும் 4 வாரத்தில் வழங்க வேண்டும்'' என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE