தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களின் நிலை என்ன? - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விளக்கம்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: “வேலூர், காஞ்சிபுரம் கூர்நோக்கு இல்லங்களிலிருந்து சிறார்கள் தப்பியதால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லையோ எனத் தோன்றுகிறது” என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் இன்று அரசு கூர்நோக்க இல்லத்தை ஆய்வு செய்த பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, “தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா என ஐந்து மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் 21 இடங்களை தேர்வு செய்து கடந்த 10 நாட்களில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. தற்போது, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளது. தமிழகத்தில் கோயம்புத்தூர், சென்னை பகுதியில் ஆய்வுகள் முடிந்துள்ளது.

இந்த ஆய்வில், குழந்தைகள் பாதுகாப்பு துறையில் உள்ள அலுவலர்களிடம் "மாசி மொபைல் ஆப்" உள்ளது. அந்த மொபைல் ஆப்பில் நாடு முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். அதில், கூர்நோக்கு இல்லங்களில் என்ன வசதிகள் உள்ளது, கடைசியாக யார் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் என்ன குறிப்புகளை பதிவு செய்துள்ளனர் போன்ற விபரங்கள் இருக்கும். இதை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனூங்கோ அறிமுகம் செய்தார். அந்த மொபைல் ஆப் அறிமுகம் செய்த பிறகு, அதில் உள்ள தகவல்களின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள ஆய்வு செய்கிறோம்.

இதுவரை நாங்கள் ஆய்வு செய்ததில், தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லம் பாரமரிப்பில் சிறப்பாக உள்ளது. அதேசமயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகவும் ஏழ்மையான, ஆரோக்கிய குறைபாடு உடைய இரண்டு குழந்தைகளை மீட்டு, அவர்களின் படிப்பு செலவுக்காக தனது விருப்ப நிதியில் 30 ஆயிரம் ரூபாயை வழங்கி, அதற்காக குழந்தைகளை பராமரிக்க ஒரு டாக்டரை நியமனம் செய்த நிலையில், அந்த இரண்டு குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். இதற்கு முழு காரணம் மாவட்ட ஆட்சியர் தான். இது சிறிய உதராணம் தான் என்றாலும், மிகப்பெரிய செயல்.

நாட்டில் மற்ற பிரதமர்களை காட்டிலும், நரேந்திர மோடி குழந்தைகளுக்கு என 38 சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பில் பிரதமர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். நமது நாட்டில் குழந்தை திருமணம், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்றவை அதிகமாகி உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.

குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கு பயம் வரும் அளவுக்கு, ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமே 10ம் வகுப்பு பொதுத்தேர்வை முதல் நாளில் 836 மாணவர்கள் எழுதவில்லை. இதே நிலை தமிழகம் முழுவதும் உள்ளது. இது போன்ற தேர்வு எழுதாத மாணவர்கள் மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக அவதூறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். இது மாணவர்களுக்கு மிக பெரிய மனஉளைச்சல் ஏற்படுத்தும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்கள், வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லமுடியாத சூழலில் உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது. அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு காரணம், அவர்களின் வறுமையா அல்லது சாதியா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில், குழந்தைகளுக்கான போலீஸ் ஸ்டேஷன் என்பதை செயல்பாடுகளுடன் வைத்து இருப்பது மிகவும் குறைவாக உள்ளது. கொத்தடிமை குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு அமர்வு குழு அமைக்கப்பட்டு, புகார்கள் கிடைந்த சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சாவூரில் விரைவில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சிறப்பு அமர்வு நடத்தப்படும்.

குழந்தைகளுக்கு தவறான தொடுதல் என்ன என்பது குறித்த விழிப்புணர்வுகள் பள்ளி மாணவர்களிடம் இல்லாமல் இருந்தது. தற்போது, குழந்தைகளுக்கு தவறான தொடுதல் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. இதனால், அவர்கள் 1098 மூலம் புகார் அளிக்கின்றனர். இதனால் போக்சோ வழக்கு அதிகமாக பதிவு செய்யப்படுகிறது. தற்போது குழந்தைகள் சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வாக உள்ளனர். இதனால், வழக்குகள் அதிகமானதாக தோன்றுகிறது. இருப்பினும், அந்தந்த மாவட்ட நிர்வாகம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றனர் என்பது குறித்து கண்காணித்து வருகிறோம்.

வேலூர் கூர்நோக்கு இல்லத்திலும், காஞ்சிபுரம் பெண்கள் கூர்நோக்கு இல்லத்திலும் தலா 6 பேர் தப்பியோடி உள்ளனர். இதில் நான்கு பேர் மீட்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையும் கண்காணித்து வருகிறோம். இது குறித்து ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், வேலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பித்துச் சென்றதாக தொடர்பாக காவல் துறையிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரி இல்லையோ என தோன்றுகிறது. கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறுவர்கள் தப்பித்துச் செல்லுவதை தடுக்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். கூர்நோக்கு இல்லம், குழந்தைகள் இல்லம் போன்றவற்றில் பாலியல் துன்புறுத்தல், மதமாற்றம் நடைபெறுகிறதா என ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது” என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் உடனிருந்தனர்.

பிரதமர் படத்தால் சலசலப்பு: பிரதமர் உருவப் படத்தை கையோடு எடுத்து வந்த ஆய்வுக் குழுவினர்: தஞ்சாவூரில் அரசு கூர்நோக்கு இலத்தில் ஆய்வு செய்ய வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் பின்னர் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினருடன் வந்தவர்கள் பிரதமர் மோடி உருவப் படத்தை மேஜையில் வைத்தனர். இந்தப் படம் மறைப்பதாக இருந்ததால், அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் எடுத்து தனது உதவியாளரிடம் கொடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆனந்த் பேசி கொண்டிருந்த போது, திடீரென பிரதமர் மோடி உருவப் படத்தை மேஜையில் வைத்தனர். அப்போது செய்தியாளர்கள் சிலர் பிரதமர் மட்டும் வைக்கிறீர்களே, முதல்வர் ஸ்டாலின் படத்தையும் வைக்கலாமே என்றனர். அப்போது ஆனந்த், பிரதமர் படம் வைத்ததில் அரசியல் ஏதும் இல்லை. முதல்வர் படம் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார். அதன் பிறகு கூர்நோக்கு இல்ல பணியாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை தேடி எடுத்து வந்து மேஜையில் வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE