பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

நாளை (ஏப்.8) மாலை 3 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை திறந்துவைக்கிறார். பின்னர், மாலை 4 மணியளவில் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

மேலும், தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதுடன், ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். பின்னர், மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாலை 6.30 மணியளவில் பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில், சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது குறித்து சட்டமன்ற காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," ராகுல் காந்தியின் பதவியை இழக்கச் செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE