காட்டேரிக்குப்பம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும்: இருளர் பாதுகாப்பு சங்கம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் 7 பழங்குடி இருளர்கள் சித்திரவதை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் ஆகியோர் கோரியுள்ளனர்.

இது குறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விழுப்புரம் மாவட்டம், கலிங்கமலை, ஆறுபுளியமரம் கே.வி.பி. செங்கல் சூளையில் வசித்த 2 சிறுவர்கள் உட்பட 7 பழங்குடி இருளர்களை கடந்த 25.02.2023 முதல் 28.02.2023 வரை 3 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து காட்டேரிக்குப்பம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சரண்யா மற்றும் 6 போலீஸார் அடித்துத் துன்புறுத்திக் கடும் சித்திரவதைச் செய்துள்ளனர்.

மேலும், 7 இருளர்கள் மீதும் திருடியதாக பொய் வழக்குப் போட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அதில் இருவர் சிறார் என்பதால் நீதிபதி இருவரையும் ரிமாண்ட் செய்யவில்லை. பின்னர் இருவரும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் கடந்த 07.03.2023 அன்று பிணையில் வெளியே வந்தனர். மற்றவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மயிலம், கண்டமங்கலம், புதுச்சேரி மங்கலம், வில்லியனூர் ஆகிய காவல்நிலையங்களில் கண்டுபிடிக்க முடியாத மொத்தம் 9 திருட்டு வழக்குகள் மேற்சொன்ன இருளர்கள் மீது போடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அப்பட்டமான பொய் வழக்குகள் ஆகும். இது குறித்து 27.02.2023 முதல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி, தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அனுப்பியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

புதுச்சேரி அரசு இதுவரையில் குற்றமிழைத்த காட்டேரிக்குப்பம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா மற்றும் 6 போலீஸார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் பணியிடை நீக்கம் கூட செய்யவில்லை. குற்றமிழைத்த போலீஸாரை காப்பாற்றும் நோக்கில் அரசும் காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. இதனிடையே இச்சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

போலீஸார் செய்த குற்றத்தை அதே துறையைச் சேர்ந்த உயரதிகாரி விசாரித்தால் பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு நியாயம் கிடைக்காது என எண்ணுகிறோம். மேலும், இது இரு மாநில காவல்துறை தொடர்புடைய சம்பவங்கள் என்பதால் சிபிஐ விசாரித்தால் மட்டுமே சரியாக இருக்கும் எனக் கருதுகிறோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிபிஐ விசாரணை கோரி பாதிக்கப்பட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்" என குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE