கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் 

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். இதில் 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததாக கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கருத்து கேட்பு கூட்டம் மற்றும் பொதுப்பணித்துறை தயாரித்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த, தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE