தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு: சிலுவைப்பாடு நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த பிப்ரவரி மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இதன்படி கடந்த ஏப்.2 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (ஏப்.7) புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. இதில் சிலுவையில் இயேசு அறையப்பட்ட போது அவர் பேசிய 7 வார்த்தைகளை கிறிஸ்தவர்கள் தியானம் செய்தனர். மேலும், அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

மேலும், பல்வேறு இடங்களில் இயேசுபிரான் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குத் தந்தை சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். சிலுவைப்பாடு பேரணி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று இறுதியில் தேவாலயத்தில் நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 9-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE