சென்னை: ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொது வெளியில் அலட்சியமாக கருத்துகளை தெரிவிப்பது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயலாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நடைமுறை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூக கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது சட்டப்பேரவை நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிப்பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படும் ஆளுநருக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
14 கோப்புகள் முடக்கம்: கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசர சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தப்பித்தும் வருவதை ஆளுநர் வழக்கமாக வைத்துள்ளார். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்கு தெரிவிப்பதில்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கப்பட்டுள்ளன. இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமில்லாமல், செயல்படாத முடக்குவாத செயலாகவே அமைந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் மிகமிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது. முதலில் ஏதோ உப்புசப்பற்ற கேள்வியை கேட்டார். பின்பு , ‘இந்த சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை' என்றார். ‘மாநில அரசுக்கே உரிமை உண்டு' என்று மத்திய அமைச்சர்களே சொன்ன பிறகும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை.
» சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேவராஜூ நாகார்ஜுன் பதவியேற்பு
» நடைபயிற்சியை வலியுறுத்தும் வாக்கரூ `வாக் இந்தியா வாக்' பரப்புரை திட்டம்
சட்டம் அறிந்தவர்போல் கருத்து தெரிவிக்கும் ஆளுநருக்கு, அரசியலமைப்பு சட்டப்படி, பண மசோதாவை திருப்பியனுப்ப அதிகாரம் இல்லை.
வகிக்கும் பதவிக்கு அழகல்ல: இந்நிலையில், இன்று (நேற்று) ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அவர் அப்படி பேசிய இடம் முறையான இடமும் அல்ல. ‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்திவைப்பு என்கிறோம்' என்று ஆளுநர் பேசியுள்ளார். மாணவர்கள் மத்தியில் இப்படி பேசியுள்ளார். ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர் நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொது வெளியில் அலட்சியமாக கருத்துகளை தெரிவிப்பது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும்.
நிர்வாகத்தை முடக்கும் செயல்: சம்ஷேர்சிங் மற்றும் பஞ்சாப் மாநில அரசுக்கிடையிலான வழக்கில், மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர் என்று சுருக்கமாக சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு 'தி கிரேட் டிக்டேட்டராக' தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம். அரசியலமைப்பு சட்டப்படி பண மசோதாதவிர பிற வகை மசோதாக்களைஅரசுக்கு ஆளுநர் திருப்பியனுப்பலாம். சட்டப்பேரவை மீண்டும்அந்த மசோதாவை நிறைவேற்றிஆளுநருக்கு அனுப்பினால், அதை அவர் நிராகரிக்க முடியாது. எனவே,ஆளுநர் கேட்ட விளக்கங்களைக் கொடுத்து, மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகும் ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும், சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதை நம் மாநிலத்தின் நிர்வாகத்தை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது.
எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. அதையும் தாண்டி, அதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதுடன், நியாயப்படுத்த முயல்வது மிகமிக மோசமான முன்னுதாரணம். தன் கருத்துகளை திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வதாகும்.
சட்டப்பேரவையின் மாண்பைக் குறைக்கும் வகையில், ஆளுநர் பேசி வருவது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதை உணர்ந்து தமிழக மக்கள் நலனுக்காகவும், அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றும் வகையிலும் அவர் செயல்படுவார் என நம்புகிறேன் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago