‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி: தோட்டக்கணவாய் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே தோட்டக்கணவாய் கிராமத்தில் இன்று (6-ம் தேதி) பகுதி நேர ரேஷன் கடையை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் சிகரமாகனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தோட்டக்கணவாய் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 180-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் வீட்டிற்கு தேவையான ரேஷன் பொருட்கள் வாங்க சிகரமாகனபள்ளி கிராமத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு தினமும் ஒத்தையடி பாதை வழியாக, திம்மம்மா ஆற்றில் அச்சத்துடன் இறங்கி செல்லும் நிலை இருந்தது.

குறிப்பாக, மழைக் காலங்களில் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும்போது ரேஷன் கடைக்கு 8 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டிய உள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான செய்தி 'இந்து தமிழ் திசை'யில் கடந்த மார்ச் 31-ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, இக்கிராமத்தில் தொடர்புடைய அலுவலர்கள் ஆய்வு செய்து, பகுதி நேர ரேஷன் கடை திறக்க அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இன்று (6-ம் தேதி) தோட்டக்கணவாய் கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.

அரசுக்கு கருத்துரு: அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் வழங்கி ஆட்சியர் பேசியதாவது: “வேப்பனப்பள்ளி வட்டாரம், கே.கே.249 சிகரமானப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டிலுள்ள சிகரமாகனப்பள்ளி முழுநேர நியாயவிலைக் கடையில் 539 குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்கள் பெற்று வந்தனர். இதில், தோட்டகணவாய் பகுதியில் உள்ள 134 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க செல்ல தார் சாலையில் 8 கி.மீ. தூரமும், ஆற்றை கடந்து செல்லவேண்டுமானால் 2 கி.மீ. செல்ல வேண்டி இருந்தது.

மேலும், மழை வெள்ள காலங்களில் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளதால், பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது. இதுதொடர்பான கோரிக்கை குறித்து கடந்த 31-ம் தேதி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், பகுதி நேர ரேஷன் கடை குறித்து கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

வேப்பனப்பள்ளி அருகே தோட்டக்கணவாய் கிராமத்தில் நேற்று பகுதி நேர ரேஷன் கடையை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

வெள்ளிக்கிழமை மட்டும் கடை: ஒரு வாரத்தில் அரசின் அனுமதி பெற்று தற்போது நிபந்தனைகள் தளர்வு செய்து, தோட்டக்கணவாய் பகுதியில் 134 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் பொருட்களை இக்கடையில் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் ஏகாம்பரம், துணை பதிவாளர் குமார், வட்டாட்சியர் சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், கூட்டுறவு சார் பதிவாளர் கல்பனா, செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 20 ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த தமிழக முதல்வர், மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE