“மசோதாவை நிலுவையில் வைத்தால் ‘ஒப்புதல் அளிக்கவில்லை’ என்றே பொருள்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

By செய்திப்பிரிவு

சென்னை: "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், நாகரிகமாக அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது பொருள். நிலுவை என்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் தரவில்லை என்பது பொருள் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறுகிறது" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் "எண்ணித் துணிக" என்று நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவர், ‘வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதிகளை முறைப்படுத்துவதற்கான தேவை என்ன இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வருகிறது. அந்த நிதிகள் உரிய வகையில் பயன்படுத்தப்படாமல், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் நம் நாட்டின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல நாடுகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

கூடங்குளம், ஸ்டெர்லைட்: வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படித்தான், தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரும்போது போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்காக வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. விழிஞம் துறைமுகம் கொண்டு வரக்கூடாது என்று வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கும் இதுபோன்ற நிதிகளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரை, நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது. மக்களைத் தூண்டிவிட்டு அந்த ஆலையை மூடிவிட்டனர். இந்தப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரு வருத்தமான நிகழ்வுதான். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புக்கு இதுபோன்ற வெளிநாடுகளில் இருந்தே நிதி வருகிறது" என்று பேசினார்.

மேலும், "தமிழக சட்டமன்றத்தில் இருந்து ஒரு மசோதா வருகிறது என்றால், ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற முறையில் அந்த மசோதாவை பார்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. பொதுப் பட்டியலில் இருப்பவைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றாவிட்டால், மாநில அரசு சட்டம் இயற்றலாம். அவ்வாறு இயற்றும்போது, மாநில அரசின் சட்டம் மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்த வேண்டும்.

பேரவைத் தீர்மானங்கள் - மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், நாகரிகமாக அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது பொருள். நிலுவை என்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் தரவில்லை என்பது பொருள் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அரசியல் அமைப்பு விதிக்குட்பட்டு உள்ளதா என்பதை ஆளுநர் கண்காணிக்க வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமா ஆகாது. சட்டசபை ஓர் அங்கம் மட்டும்தான். சட்டசபை ஒரு அங்கமாக இருப்பதால்தான் ஆளுநருக்கு பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன" என்று அவர் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE