“பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலக வேண்டும்” - புதுச்சேரி அதிமுக

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளிவர வேண்டும்” என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "நாடு முழுவதும் சமூக நீதி நிலை நாட்டுவது சம்பந்தமாக நடத்தப்பட்ட மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சமூக நீதியை நிலைநாட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என பேசியுள்ளார். ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலைபாட்டையும், ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைபாட்டையும் திமுக எடுத்து வருவது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமூக நீதி என்ற பெயரில் திமுக ஆட்சியில் சமூக அநீதி நடைபெற்று வருகின்றது. பல நேரங்களில் சமூக நீதியை காக்க வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் பட்டியலினத்தவருக்கு 18 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பேசி வருகிறார். ஆனால், தான் முதல்வராக உள்ள தனது அமைச்சரவையில் 6 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டிய மு.க.ஸ்டாலின் அப்படி வழங்காமல் 3 பேருக்கு மட்டும் அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார். இதுதான் சமூக நீதியா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? பட்டியலினத்தவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை மறுப்பது எந்தவிதத்தில் நியாயம்.

பட்டியலின மக்களுக்காக பாடுபடுவதாக கூறி வரும் விசிக தலைவர் திருமாவளவன் இந்த அநீதியை ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையென்றால், பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளிவர வேண்டும். சமூக நீதிக்காக ஆட்சியில் இருக்கும்போதும், ஆட்சியில் இல்லாதபோதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே.

இந்திய நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநாட்டி சமூக நீதி காத்த வீராங்கனையான ஜெயலலிதாவின் கொள்கைகளை பின்பற்றி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியில் பட்டியலின மக்களுக்காக அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். தற்போது அதிமுக ஆட்சியில் இல்லை என்றாலும் சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருபவர் எங்களது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

பட்டியலினத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சராகும் உரிமையை தடுத்து நிறுத்தியுள்ள திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

தமிழகம் முழுவதும் அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி புதுச்சேரியில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளோம். புதுச்சேரியில் 3 லட்சம் வரை உறுப்பினர்களை சேர்க்க இலக்காக நிர்ணயித்து புதுச்சேரி அதிமுக தலைமைக்கு விண்ணப்பம் வழங்கி உள்ளோம்" என அன்பழகன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE