திருவள்ளூரில் தமிழ்நாடு அறிவுசார் நகரம்: தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் 

By செய்திப்பிரிவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.6) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,"கல்வியை மையமாகக் கொண்டிருக்கும் உலகத் தரத்திலான ஒரு அறிவு சூழல் அமைப்பாக 'தமிழ்நாடு அறிவுசார் நகரை' உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் அறிவுசார் தொழிலகங்கள் அனைத்தும் அருகருகே, நவீன நகரத்தில் அமைந்திருக்கும். பசுமையான வாழ்விட சூழலில் அடுத்த தலைமுறைக்கான புத்தாக்கத்தை உத்வேகத்துடன் ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்நகரம் திகழும்.

இந்த நகரில், உயிரின அறிவியல் (life science), வேளாண் தொழில்நுட்பம் (agri tech), கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு (architecture and design), வான்வெளி மற்றும் பாதுகாப்பு (aerospace & defense), நகர்திறன் (mobility), நிதி தொழில்நுட்பம் (fintech), தொலைத்தொடர்புகள் (telecommunication) போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சியும், புத்தாக்கத்தையும் வளர்க்கும் பணியை தமிழ்நாடு அறிவு சார் நகரம் மேற்கொள்ளும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கையகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE