விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம்

By இ.மணிகண்டன்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடங்கின.

வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டது. 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்கக் காலம் வரையிலான சுமார் 25 ஏக்கர் பரப்புடன் காணப்பட்ட இப்பகுதியில் இரும்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.

அதோடு, நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள், சூடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்காளி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. வைப்பாற்றின் கரையில் உள்ள இந்த தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் மற்றும் பானை ஓடுகள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிய முடிகிறது.

இந்த நிலையில் 2ம் கட்ட அகல ஆய்வு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தன. அதையடுத்து இப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கலந்து கொண்டு 2ம் கட்ட அகலாய்வு பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், முதற்கட்ட அகழாய்வில் பல்வேறு முக்கியமான வரலாற்று சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவில் நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரையிலான காலகட்டங்களுக்குட்பட்ட வரலாற்று ஆவணங்கள் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டு இதுவரை நிரூப்பிக்கப்படவில்லை. ஆனால் வெம்பக்கோட்டை பகுதியில் அதற்குரிய ஒரு சில சான்றுகள் கிடைத்துள்ளதால், அவற்றை விரிவாக அகழாய்வு செய்து, அறிவியல் அடிப்படையில் கண்டறிந்து, தமிழர்களின் தொன்மையை நிருவ வேண்டும் என்ற அடிப்படையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கண்டறியப்பட்ட பல்வேறு பொருட்களை, ஆய்வு செய்வதற்காக பல்வேறு அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியையும், இங்கு கிடைத்த பொருள்களையும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும். இப்பகுதியில் சாலை அமைக்கவும் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, தொல்லியல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE