விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் 400 ஓட்டுநர்களை நியமிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் 400 ஓட்டுநர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓராண்டு காலத்துக்கு 400 ஓட்டுநர்களை நியமனம்செய்வது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரி கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரியில் நிறுவனங்கள் முன்னிலையில் டெண்டர்விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.

இதில் நாள் ஒன்றுக்கு ஒரு ஓட்டுநருக்கு தலா ரூ.553 என்றளவில் ஊதியம் வழங்க முன்வந்த சென்னையைச் சேர்ந்த டீம் பெசிலிட்டி மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் தேர்வானது. இது தொடர்பான முன்மொழிவு நிதிக்குழு முன் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் நிதிக்குழுவின் பரிந்துரைகள் வாரியக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ.553 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் கூடிய ஊதியம் வழங்கும் வகையில் ஓட்டுநர்களை வழங்க தேர்வான நிறுவனத்தை மேலாண் இயக்குநர் நியமிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, ஓட்டுநர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கியதையடுத்து விரைவு போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் ஒப்பந்த நிறுவனம் மூலம்400 ஓட்டுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதன்படி, சென்னையில் உள்ள 3 பணிமனைகளில் 120 ஓட்டுநர்களும், தமிழகம் முழுவதும்உள்ள இதர 9 பணிமனைகளில் 280 ஓட்டுநர்களும் பணிபுரியஉள்ளனர். இந்த நடவடிக்கைக்குதொழிற்சங்கத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் எம்.கனகராஜ் கூறியதாவது: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1,600 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் 685 ஓட்டுநர்களை நியமிக்க மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகள் நிறைவடைய 8 மாதங்களுக்கு மேலாகும்.

ஆனால் வரும் கோடை விடுமுறையின்போது பேருந்து சேவையை சமாளிக்க வேண்டியிருப்பதால் இடைக் காலமாக இந்த நடவடிக்கை மேற்கொள்கிறோம் என நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தகாலமோ ஓராண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தனியார் மயத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைதான். இதை எப்போதும் ஏற்க மாட்டோம். இந்த முடிவை நிர்வாகம் கைவிட்டு, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE