சென்னையில் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம் - குளத்தில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் சர்வ மங்கள தேவி சமேத தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, மூவரசம்பட்டு குளத்தில் இந்த கோயிலின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தீர்த்தவாரிக்கான சடங்குகள் முடிந்த பிறகு, சுவாமி சிலையுடன் 20-க்கும் மேற்பட்ட கோயில் அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கினர். சுவாமி சிலையை குளத்தில் இறக்கி நீராட்டியபோது, ராகவன் என்றஇளம் அர்ச்சகர் தண்ணீரில் மூழ்கிஎழுந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கினார். அருகே இருந்த மற்ற அர்ச்சகர்கள் உடனடியாக நெருங்கிச் சென்று, அவரை காப்பாற்ற முயன்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களும் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர்.

உடனடியாக அருகே இருந்தபக்தர்கள் சிலர் குளத்தில் குதித்து,அங்கு உயிருக்கு போராடியவர்களை மீட்டனர். தீயணைப்பு, மீட்புதுறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள்விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நடந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் மகன் வனேஷ் (18), புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ரகு மகன் ராகவன் (21). இவர்கள் இருவரும் சி.ஏ. படித்து வந்தனர். புழுதிவாக்கம் முத்து முகமது தெருவை சேர்ந்த ஹரிஹரன் மகன் ராகவ் (18), பி.காம். மாணவர். நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியை சேர்ந்த பாஸ்கர் மகன் சூர்யா (எ) குருராஜன் (25), தந்தையுடன் இணைந்து கேட்டரிங் தொழில் செய்து வந்தார். மடிப்பாக்கம் பாலையா தோட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் யோகேஸ்வரன் (22)பி.இ . ஆட்டோமொபைல் டிசைன் இன்ஜினீயரிங் படித்து வந்தார். இவர்கள் 5 பேரும்தான் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீர்த்தவாரி நிகழ்வின்போது 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று, உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

முதல்வர் ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்த நிலையில், உயிரிழந்த 5 அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தெரிவித்துள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக கோயில்அர்ச்சகர்கள், அப்பகுதி மக்கள்நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி சூர்யா,வனேஷ், ராகவ், யோகேஸ்வரன், ராகவன் ஆகிய 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்