தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: 9.76 லட்சம் பேர் எழுதுகின்றனர்

By செய்திப்பிரிவு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (ஏப்.6) தொடங்கி ஏப்.20 வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத் திறனாளிகள், 5 மூன்றாம் பாலினத்தவர், 2,640 சிறை கைதிகளும் அடங்குவர்.

தேர்வு எழுதும் மாணவர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத் தாள் அல்லது பிறரை பார்த்து எழுதுவது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்வது, விடைத்தாளை மாற்றிக் கொள்வது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுத அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தர தடை விதிக்கப்படும். இதுபோன்ற ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

முறைகேடுகளை தடுக்க, நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை தேர்வு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கு வராதவர் விவரங்களை மாவட்டவாரியாக சேகரித்து உடனே ஆணையரகத்துக்கு அனுப்ப பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE