மதுரை; மதுரை மாநகரின் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய சாலைகளில் ஒன்றாக புதுநத்தம் சாலை உள்ளது. இந்த சாலை, திருச்சி, சென்னை மற்றும் திண்டுக்கல் நத்தம் நகரங்களை இணைக்கிறது. இந்த சாலையில் அமைந்துள்ள பகுதிகள், வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக உள்ளது. ஆனாலும், இந்த சாலையில் தனியார் வணிக வளாகங்கள், நிறுவனங்கள் அதிகளவு திறக்கப்பட்டதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. மற்றொரு புறம் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. மு
ழுநகர் பகுதியாக உருவெடுக்கும் முன்பே இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி, நத்தம் சாலை புறநகர் பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் எளிதாக நகரப்பகுதிகளுக்கு வந்து செல்வதற்கும், மதுரையில் இருந்து சென்னை, திருச்சி செல்லும் போக்குவரத்து பயணத்தொலைவை குறைக்கவும் தொலைநோக்கு பார்வையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாகவும், அதன் மேல் ரூ.612 கோடியில் 7.3 கி.மீ., பறக்கும் பாலம் அமைக்கவும் முடிவு செய்து 2018ம் ஆண்டு பணிகளை தொடங்கியது.
தற்போது இந்தப் புது நத்தம் சாலையும், அதன் மேல் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் பாலம் பணிகளும் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்த பாலத்தை தாங்கி பிடிக்கும் வகையில் 150 அடிக்கு ஒரு இடத்தில் ராட்ச தூன்களும், அந்த தூன்களை இணைக்க ‘காங்கிரீட் கர்டர்’ அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ்பகுதியில் இரவை பகலாக்கும் வகையில் ஒவ்வொரு தூணுக்கு இடையிலும் எல்இடி விளக்குகளும், தூணை சுற்றி 4 திசைகளிலும் சிறிய விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
ஊமச்சிகுளம் அருகே மாரணி பகுதியில் பறக்கும் பாலம் முடியும் பகுதியில் தொடங்கும் நான்குவழிச்சாலை கொட்டாம்பட்டி சென்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த பறக்கும் பாலம், நான்கு வழிச்சாலையால் தற்போது மதுரையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு 23 கி.மீ. பயண தூரம் குறையும்.
இந்தப் பாலத்தில் நத்தம் சாலையில் நான்கு இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விசால்டி மஹால் அருகே பாலத்தில் ஏறினால் நத்தம் சாலையில் உள்ள நாராயணபுரத்தில் இறங்குவதற்கும், திருப்பாலையில் உள்ள பாலத்தில் ஏறுவதற்கும் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊமச்சிகுளம் அருகே மாரணி பகுதியில் இந்த பாலத்தில் ஏறுகிறவர்கள், திருப்பாலையில் இறங்குவதற்கும், நாராயணபுரத்தில் ஏறவும் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் முக்கிய நகர்பகுதிகளாக நாராயணபுரம், திருப்பாலை, அய்யர் பங்களாக ஆகியவை திகழ்கின்றன. இப்பகுதிகளில் இருந்து பாலத்தில் ஏறவும், இப்பகுதிக்கு செல்ல இறங்கவும் வசதிகள் உள்ளதால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையவும், விரைவான போக்குவரத்திற்கும் வசதி ஏற்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தை சென்னைக்கு வரும் 8-ம் தேதி வரும் பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக பாலத்தை தயாராக பயன்பாட்டிற்கு வைத்திருக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், இப்பாலத்தின் கட்டுமானப்பணியை மேற்கொள்ளும் பொறியாளர்களை அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இன்று முதல் முறையாக இந்த பாலத்தில் வாகன சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
விசால் டி மஹால் அருகே நத்தம் பாலத்தில் செல்வதற்கும், அதுபோல் ஊமச்சிகுளம் அருகே மாரணி பகுதியில் இந்த பாலத்தில் ஏறுவதற்கும் வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சாலையில் வருவோர் வழக்கமாக பாலம் கட்டுமானப்பணி நிறைவடைந்தும் போக்குவரத்திற்கு இதுவரை அனுமதிக்கப்படாததால் பாலத்தின் கீழ் சாலையிலே சென்று வந்தனர்.
திடீரென்று தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து போலீஸார், இந்த பாலத்தின் இரு பகுதியிலும் நின்று கொண்டு பாலத்தில் ஏறுவதற்கு வாகன ஓட்டிகளை அனுமதித்தனர். அதனால், வாகன ஓட்டிகள், இந்த பாலத்தில்இன்று முதல் சென்று வர ஆரம்பித்தனர். இதுவரை இந்த சாலையில் பாலம் அமைக்கப்படுவதற்கு முன் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தனர். அதுபோல், பாலம் அமைத்தப்பிறகும் பாலத்தின் கீழ் பகுதி சாலையிலே அனுமதிக்கப்பட்டதால் நெரிசலிலே சென்றனர்.
இந்நிலையில், இன்று முதல் பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் வானக ஓட்டிகள், பொதுமக்கள், பாலத்தில் உற்சாகமாக பயணிக்கத் தொடங்கினர். அவர்கள் பாலத்தின் பயணத்தப்படியே பாலத்தின் அழகையும், அதன் கட்டுமான அமைப்பையும் ரசித்தப்படியே சென்றனர். போக்குவரத்து நெரிசலே இல்லாமல் சில நிமிடங்களிலே நகரப்பகுதியில் இருந்து புறநகர் பகுதியில் உள்ள ஊமச்சிகுளத்திற்கு சென்றுனர். அதுபோல், ஊமச்சி குளம் பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு மக்கள் எளிதாக வந்தடைந்தனர். பலர் பாலத்தில் ஆங்காங்கே நின்று சிறிது நேரம் பாலத்தையும், பாலத்தில் இருந்து நகர அழகையும் கண்டு ரசித்து ஆனந்தமடைந்தனர்.
ஆஹா ஓஹோ அற்புதம், மிரட்டிட்டாங்க!
ஊமச்சிகுளத்தை சேர்ந்த காளி கூறுகையில், ‘‘எனக்கு ஊமச்சிகுளத்தில்தான் வீடு. நகருக்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எப்போதும் பாலத்திற்கு கீழேதான் வந்து போவேன். இன்று விசால் டி மஹால் அருகே வந்தபோது திடீரென்று பாலத்தில் செல்ல போலீஸார் அனுமதித்தனர். சரி போவோம் என்று வந்தேன். பாலத்தில் வந்ததால் ரிசர்வ் லைன், அய்யர் பங்களா, திருப்பாலை பகுதிகளை கடந்ததே தெரியவில்லை. சில நொடிகளிலே ஊமச்சிக்குளம் வந்துவிட்டேன். எந்த நெரிசலும் இல்லை. விபத்துகளும் ஏற்படாது. புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களும், தொலைதூரத்தில் இருந்து வருகிறவர்களும் நகருக்கு இனி எளிதாக வந்து செல்ல பயனுள்ளதாக இருக்கும். என்னைப்போன்றவர்கள் நேரத்திற்கு வேலைக்கு செல்லலாம்” என்றார்.
நத்தத்தை சேர்ந்த ராஜா முகமது கூறுகையில், ‘‘நான் வியாபாரம் நிமித்தமாக மதுரைக்கு வந்துசெல்வேன். மதுரைக்கு வரும்போதெல்லாம், ஊமச்சிகுளம் தாண்டியதும் இந்த சாலையில் செல்லும்போது நொந்துபோவேன். அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும். இன்று பாலத்தில் வந்ததால் நெரிசலே இல்லாமல் வந்தேன். நத்தம், திருச்சியில் இருந்து வருகிறவர்கள், இந்தப் பாலம் மிகுந்த உபயோகமாக இருக்கும். இதுபோன்ற பிரமாண்ட பாலத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. பாலத்தில் பயணம் செய்தது புதுஅனுபவமாக உள்ளது” என்றார்.
சத்திரப்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி கூறுகையில், ‘‘பாலம் சூப்பருங்க, ஆஹா, ஓஹோன்னு இருக்கிறது. மிரட்டிபுட்டாங்க. இன்று முதல் முதலாக பாலத்தில் வந்ததால் பாலம் ஏறிய இடத்தில் சாமியை கும்பிட்டுதான் வந்தேன்.
பாலத்தில் ஒவ்வொரு நொடியையும் ரசித்து பயணித்தேன். நான் பெரியார் பஸ்நிலையம் சுப்பிரமணியபுரம் பகுதியில் மின்வாரியத்தில் வயர் மேனாக பணிபுரிகிறேன். அவசரத்திற்கு சத்திரப்பட்டியில் இருந்து பெரியார் பஸ்நிலையம் செல்ல முடியாது. மிகுந்த சிரமப்பட்டேன். இனி என்னை போன்ற அத்தியாவசிய துறைகளில் பணிபுரிவோர் எளிதாக நகரப்பகுதிகளுக்கு சென்று வரலாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago