பங்குனி உத்திரம்: சேலத்தில் இரு மடங்காக விலை உயர்ந்த குண்டுமல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை

By வி.சீனிவாசன்

சேலம்: பங்குனி உத்திரம், பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ரூ.400-க்கு விற்பனையாகி வந்த குண்டுமல்லி இரட்டிப்பாய் விலை உயர்ந்து கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வஉசி பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்து, விற்று செல்கின்றனர். வஉசி பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது, ஒரு மாதமாக பூக்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், குண்டு மல்லி கிலோ ரூ.400 விலையாக சரிவடைந்துள்ளது. குண்டு மல்லி விலை சரிந்ததால், பொதுமக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி சென்று வந்தனர். நேற்று பங்குனி உத்திரம், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு விசேஷ தினமானதால் குண்டு மல்லி விலை அதிகரித்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு வரை குண்டு மல்லி கிலா ரூ.400 விலையில் விற்பனையானது.

விசேஷ தினத்தால் இரட்டிப்பாய் விலை உயர்வடைந்து நேற்று கிலா ரூ.800க்கு குண்டு மல்லி விற்பனையானது. அதேபோல, முல்லை கிலோ ரூ.500 விலையில் விற்பனையானது, நேற்று ரூ.800 விலையில் விற்றது. சேலம் வஉசி. பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை நிலவரம் (ஒரு கிலோ கணக்கில்): குண்டு மல்லி - ரூ.800, முல்லை- ரூ.800, காக்கட்டான் -ரூ.400, கலர்காக்கட்டான் - ரூ..300, சம்மங்கி- ரூ.100, அரளி-ரூ.120, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.130, நந்தியாவட்டம்- ரூ.80, சின்ன நந்தியா வட்டம்- ரூ.80 விலைகளில் விற்பனையாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE