தமிழகத்தில் 2022-23-ல் மீனவர்களுக்கு 93,992 கிலோ லிட்டர் டீசல் விநியோகம்

By செய்திப்பிரிவு

சென்னை: 2022-23 ஆம் நிதியாண்டில், விற்பனை வரி தொகை ரூ.169.27 கோடி அளவில் விலக்களிக்கப்பட்டு, விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட 93,992 கிலோ லிட்டர் டீசல் எரியெண்ணெய் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விசைப் படகிற்கு ஒரு ஆண்டிற்கு 18,000 லிட்டரும், அதாவது ஒரு விசைப் படகிற்கு 2 மாத மீன்பிடித் தடைக்காலம் தவிர 10 மாதங்களுக்கு, மாதத்திற்கு 1800 லிட்டர் வீதம் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு இயந்திரமயமாக்கப்பட்ட நாட்டுப் படகிற்கு, ஒரு ஆண்டிற்கு அதிகபட்சமாக 4000 லிட்டர் வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் வழியாக வழங்கி வருகிறது.

2022-23 ஆம் நிதியாண்டில், விற்பனை வரி தொகை ரூ.169.27 கோடி அளவில் விலக்களிக்கப்பட்டு, விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட 93,992 கிலோ லிட்டர் டீசல் எரியெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் மண்ணெண்ணெய்: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட வெளிப் பொருத்தும் இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகளுக்கு ஓராண்டில் ஒரு படகிற்கு 3400 லிட்டர் தொழிலக மண்ணெண்ணெயினை லிட்டர் ஒன்றிற்கு ரூ.25 வீதம் மானிய விலையில் வழங்கி வருகிறது.

2022-23 ஆம் ஆண்டில் ரூ.112.02 கோடி மானியத்துடன் 17,100 கிலோ லிட்டர் தொழிலக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2023-24 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE