தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.5) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இந்திய பகுதிகளின் மேல்வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஏப்.5) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப்.6-ம் தேதி முதல் ஏப்.8-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (ஏப்.5) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மழை அளவு: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் குண்டேரிபள்ளத்தில் 10 செ.மீ. கோபி செட்டிபாளையம், நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட்டில் தலா 9 செ.மீ. தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 7 செ.மீ. நீலகிரி மாவட்டம் குன்னூர், தேனி மாவட்டம் சோத்துப்பாறை, போடிநாயக்கனூர், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தலா 5 செ.மீ. மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE