டெல்டா மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு - திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு தமிழக கட்சிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி டெல்டாவில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமக தலைவர் அன்புமணி: சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலக்கரி சுரங்கங்களை கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் நிலையில், தமிழக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, புதிய நிலக்கரி திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும், நிலத்தைக் கையகப்படுத்தாது என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்: காவிரிப் படுகை பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு சுமார் 1.25 லட்சம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்படும் என்ற செய்தி, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. எனவே, காவிரிப் படுகை பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணிகளுக்கான ஆய்வுப் பணிகளைத் தடுக்க, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம்தர வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இந்த திட்டம் டெல்டா மாவட்டங்களை கடுமையாகப் பாதிப்பதுடன், உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். தமிழக அரசின் ஒப்புதலின்றி இதைசெயல்படுத்துவது, மாநில உரிமையை மீறிய செயலாகும். இதுகண்டிக்கத்தக்கது. எனவே, மத்தியஅரசு உடனடியாக இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: நிலக்கரி சுரங்கத் திட்ட ஆய்வுப் பணிக்காக விடப்பட்டடெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்வதற்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டும். இல்லையேல், விவசாயிகள், மக்களைத் திரட்டி, அமமுக சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நிலக்கரி சுரங்கம் அமைக்க ஆயத்தப் பணிக்கான டெண்டர் விடப்பட்டிருப்பது, விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களை, புதிய நிலக்கரித் திட்டங்களுக்காக மத்திய அரசு தேர்ந்தெடுத்திருப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாய நிலங்களையும் அழிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக அரசும் இதை அனுமதிக்கக் கூடாது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: புதிய நிலக்கரித் திட்டங்கள் தமிழகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும். இதை தடுக்காவிட்டால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, புதிய நிலக்கரித் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, வி.கே.சசிகலா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலபொதுச் செயலாளர் சாமி.நடராஜன், எஸ்டிபிஐ கட்சி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் ஆகியோரும், புதிய நிலக்கரி சுரங்கங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு அனுமதிக்காது: வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும், அதை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்பட்டுள்ள நிலையில்,விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்.தடை செய்யப்பட்ட பகுதியில் சுரங்கங்கள் அமைக்க அனுமதி கிடையாது. சுரங்கங்களை தடை செய்வதில் முதல்வர் உறுதியாக உள்ளார். வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். அப்போது, இது தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார்.

திமுக அரசு விவசாயிகளுக்கான அரசு. விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய எந்த செயலிலும் அரசு ஈடுபடாது. விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேபோல, திருவாரூரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசியஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதை தமிழக அரசு அனுமதிக்காது. இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் இன்று (ஏப்.5) அறிவிப்பு வெளியிடுவார்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE