பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகம் நாளை முதல் 9-ம் தேதி வரை மூடல்

By செய்திப்பிரிவு

முதுமலை: பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, நாளை (ஏப்.6) முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும், ஓய்வு விடுதிகள், உணவங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும், வாகன சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, புலிகள் காப்பகங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

பந்திப்பூர், முதுமலை, வயநாடு: அதன்படி, கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு வரும் 9-ம் தேதி வருகிறார். அங்கிருந்து, முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் வருவதாக வெளியான தகவலை அடுத்து, முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெப்பக்காடு முகாமுக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், தெப்பக்காட்டிலுள்ள பழங்குடியினர் கிராமங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.

துரிதமாக நடக்கும் பணிகள்: யானைபாடி, லைட்பாடி, தெக்குபாடி ஆகிய பழங்குடியின கிராமங்களில் நடைபாதை அமைப்பது, வீடுகள், கழிப்பறைகளை சீரமைத்து வண்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. பாகன் பொம்மன், பெள்ளி தம்பதி வீடு, அதை சுற்றியுள்ள வீடுகளும் சீரமைக்கப்படுகின்றன. மசினகுடியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி, நாளை முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பிரமுகர் வருகை: இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறியதாவது: முதுமலைக்கு 9-ம் தேதி முக்கிய பிரமுகர் வரவுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 6 முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது.

மேலும், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் உள்ளிட்டவை 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூடப்படுகின்றன.

மேலும், வன விலங்குகளை பார்ப்பதற்கான வாகன சவாரி, 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தற்காலிக நிறுத்தப்படுகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE