மதுரை: மதுரை மாவட்ட அதிமுகவில் மும்மூர்த்திகள் என அறியப்படும் முன் னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், மற்றும் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கட்சியில் தங்கள் வாரிசுகளை முன்னி லைப்படுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தது முதல் தற்போது வரை மதுரை மாவட் டத்தில் செல்லூர் கே.ராஜு, ஆர்பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் முக்கிய அதிகார மையங்களாக இருந்து வருகின்றனர். மூவரும் எம்எல்ஏ பதவிகளைத் தவிர கட்சியில் இரட்டைப் பதவிகளை வைத் துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மாநகரச் செயலாளர், அமைப்புச் செயலாளராக உள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர், மாநில ஜெ., பேரவைச் செயலாளராக இருப் பதோடு சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவராகவும் கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளார். விவி.ராஜன் செல்லப்பா மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளராக உள்ளார்.
ஜெயலலிதா இருந்தபோது இவர்கள் மூவரும் முக்கிய அதிகார மையங்களாக இருந்தும் இவர்களின் பரிந்துரைகளை மீறி சட்டப்பேரவை மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி நிர்வாகிகளுக்கு ‘சீட்’ வழங்கப் பட்டது. கட்சி அமைப்புகளிலும் பதவிகள் வழங்கப்பட்டன.
ஜெயலலிதா பொதுச் செயலா ளராக இருந்தவரை நிர்வாகிகளும், தொண்டர்களும் எந்த நேரத்திலும் கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகள் தங்களைத் தேடி வரலாம் என்ற நினைப்போடு பணியாற்றினர். இதன் காரணமாக புதிதாக நிர்வாகிகள் உருவாகிக் கொண்டே இருந்தனர். இளைஞர்களும் அதி களவு கட்சியில் சேர்ந்ததால் கட்சியும் புத்துயிர் பெற்றது.
தற்போது, மதுரை மாவட் டத்தில் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோரை மீறி நிர்வாகிகள், தேர்தல்களிலும் கட்சி யிலும் வாய்ப்புகளைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது.
மதுரையில் தற்போது தங்களுக்கு அடுத்த நிலையில் கட்சியில் தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். செல்லூர் கே.ராஜு, மாநகர அதிமுகவில் தனது மருமகன் கணேஷை முன்னிலைப்படுத்தி அவருக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இணைச் செயலாளர் பதவியை வாங்கிக் கொடுத் துள்ளார். அதனால், மாநகர நிர்வாகிகள், செல்லூர் ராஜு இல் லாதபட்சத்தில் அவரது மருமகன் வராமல் கட்சி நிகழ்ச்சி களை தொடங்குவதில்லை.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் தனது மகள் பிரியதர்ஷினியை முன்னிலைப் படுத்தத் தொடங்கிவிட்டார். ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலில் தந்தைக்காக கிராமம் கிராமாகச் சென்று மகள் பிரச்சாரம் செய்தார். தற்போது கட்சி நிகழ்ச் சிகளில் பிரியதர்ஷினி தந்தையுடன் பங்கேற்று மேடைகளில் பேசி வருகிறார். விரைவில் அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகக் கூறப் படுகிறது.
விவி.ராஜன் செல்லப்பா மகன் விவி.ஆர்.ராஜ்சத்தியன் அதிமு கவில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பச் செயலாளராக உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனாலும், மனம் தளராமல் கட்சியில் தனது இருப்பைக் காட்ட மாவட்ட அளவில் கட்சி நிகழ்ச்சிகளில் தந்தையுடன் பங்கேற்று வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி செல்லும் இடமெல்லாம் ராஜ் சத்தியன் மாநிலம் முழுவதும் தொடர்கிறார்.
இந்த மூவரும் தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்தி வருவதால் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் இதுவரை மும்மூர்த்திகளுடன் போராடிய நிலை யில் இனி அவர்களது வாரிசு களுடன் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுகவினர் புலம்புகின்றனர்.