டெல்டா பகுதி நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தொடர் போராட்டம்: தமிழக விவசாயிகள் எச்சரிக்கை

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து தமிழக அரசு பந்த் அறிவிக்க வேண்டும் என்று தமிழக விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறியது: “காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதி, இப்பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான ஆய்வு மேற்கொண்டிருப்பது, அடிப்படையில் சட்டத்திற்குப் புறம்பானது, முரணானது. காவிரி டெல்டாவில் அனைத்து நாட்களிலும் நெல், கரும்பு போன்ற பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது என்பது சோற்றுக்குப் பதிலாக நிலக்கரியை சாப்பிடுவதற்குச் சமமாகும்.

நிலக்கரியை சாப்பிட முடியாது என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை. மேலும், தமிழகம் முழுவதுமுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர் இப்பகுதியிலிருந்து தான் கிடைக்கிறது. இப்பகுதியை விட்டு விட்டு வேறு பகுதிக்கு இந்த திட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசைக் கண்டித்து, தமிழக அரசு பந்த் அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் கூறியது: “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இப்பகுதியில் கணிம வளங்கள் எடுக்கப்படாது என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள், கனிம வளங்கள் எடுப்பதற்கான அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் வலியுறுத்தினார்கள். அப்போது அதனை யாரும் காதில் வாங்கிக்கொள்ளாததின் விளைவு, இன்று மத்திய அரசு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கணிம வளங்கள் எடுக்கப்படுமேயானால் விவசாயிகளை திரட்டி கடுமையாக எதிர்ப்போம். இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிகளும், தற்போது நடைபெற்றுக் கொண்டிக்கும் கூட்டத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து, திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் செய்ய வேண்டும். சட்டப்பேரவை கூட்டத் தொடரில், மத்திய அரசு அனைத்து கட்சியினர் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு இந்தத் திட்டத்தை நிறுத்தா விட்டால், வரும் மக்களவைத் தேர்தலில்போது, அனைத்து விவசாயிகளும், தேர்தலை புறக்கணிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன் கூறியது: ”காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி பகுதி மற்றும் கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியாதோப்பு நிலக்கரி பகுதி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய வடசேரி நிலக்கரி பகுதி ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளடக்கிய பகுதிகளாகும். ஏலத்துக்கு விண்ணப்பிக்க மே 30-ம் கடைசி நாளாகவும், ஜூலை 14-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் தேதியாகவும் மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படாது என தமிழக அரசு சட்டம் கூறுகிறது. மேலும், 2015-ம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்த நிரந்தர தடையும் அமலில் உள்ளது. நிலவளம், நீர்வளம், முப்போகம் விளையக்கூடிய விளைநிலங்களைக் கொண்ட பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பு என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மாநில அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பு மாநில உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். எனவே, மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்களை எந்த வகையிலும் அமல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு இத்தகைய அறிவிப்பினை உடனே திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த மத்திய பாஜக அரசு செயல்படுத்த நினைத்தால் அதற்கு எதிராக விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழகத்தின் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: நிலக்கரி ஏல ஒப்பந்த அறிவிப்பில் டெல்டா பகுதிகளை நீக்குக: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE