சென்னை - மதுரை வந்தே பாரத் ரயில்: பணிகளைத் தொடங்கிய தெற்கு ரயில்வே 

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது.

முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரயில்களை இயக்க, இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, வாரணாசி இடையே கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது 11 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை - கோவை இடையே 12-வது வந்தே பாரத் ரயில் சேவையை, வரும் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது.

இதன்படி, வந்தே பாரத் ரயிலை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்காகவும், ரயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடையை மின்மயமாக்கம் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன்படி மதுரை ரயில் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது நடைமேடை முழுவதும் மின்மயமாக்கம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு, பணி ஒப்பந்தம் அளித்த நாளில் இருந்து 3 மாதத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் நிறைவு பெற்ற பிறகு சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்குவது குறித்து ரயில்வே வாரியம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE