புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்வு: இம்மாதம் முதல் அமல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநிலத்தில் வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு செய்து மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து இருந்தது. இது தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்கப்பட்டது. தொடர்ந்து மின் துறையின் கணக்கு வழக்குகளை ஆராயந்த மின்சார இணை ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

ஒரு விளக்கு திட்டம் கீழ் மாதம் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஒரு யூனிட் 1.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது 1.45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான கட்டணம்: புதுச்சேரியில் வீடுகளுக்கு தற்போது முதல் 100 யூனிட்டுக்கு 1.90 ரூபாய் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தற்போது ரூ.2.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 2.90 ரூபாயில் இருந்து 3.25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5 ரூபாய் மின் கட்டணத்திற்கு பதிலாக ரூ.5.40 பைசா வசூலிக்கப்பட உள்ளது.

300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் 6.45 ரூபாயில் இருந்து 6.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே மின்சார கட்டண உயர்வு, காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ், கோழிப் பண்ணை, தோட்டக்கலை, மீன் பண்ணைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள்: வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் குறைந்த (எல்.டி.,) மின் இணைப்புகளை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.70க்கு பதிலாக 6 ரூபாயும், 101 முதல் 250 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.6.75 கட்டணத்திற்கு பதிலாக ரூ.7.05 வசூலிக்கப்பட உள்ளது. 251 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு ரூ.7.50 கட்டணத்திற்கு பதிலாக ரூ.7.80 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக பயன்பாட்டில் உயர் மின் அழுத்த(எச்.டி.,) தொழிற்சாலைகளுக்கான கட்டணம் தற்போது யூனிட்டுக்கு 5.45 ரூபாயில் இருந்து, 5.60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள்: எல்.டி.,மின் இணைப்பினை பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் 6.05 ரூபாயில் இருந்து, 6.35 ரூபாயாகவும்,11 கே.வி., 22 கே.வி., இணைப்பினை பெற்றுள்ள எச்.டி.,தொழிற்சாலைளுக்கான கட்டணம் 5.30 ரூபாயில் இருந்து 5.45 ரூபாய்க்கும்,110 கேவி.,132 கே.வி,மின் இணைப்புகளை பெற்றுள்ள இ.எச்.டி.,தொழிற்சாலைகளுக்காக கட்டணம் 5.15 ரூபாயில் இருந்து 5.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, "புதுச்சேரி மின்துறை கேட்ட கட்டண உயர்வில் இருந்து யூனிட்டுக்கு 5 பைசா மட்டும் குறைத்து இணை மின்சார ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் வரத்தக ரீதியிலான பயன்பாட்டுக்கு மின் கட்டணம் மின்துறை கேட்டதை விட 20 பைசா யூனிட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது" என அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE