ராமநாதபுரம் மாவட்டம் அருகே போகலூரில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் கண்மாயின் வடக்கில் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் காந்தி, பூமிநாதன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து, முனைவர் பட்ட ஆய்வாளர் ஹரி கோபால கிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் களஆய்வு செய்தனர்.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு கூறியதாவது
''வைகை ஆற்றில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள இப்பகுதி காத்தான் ஓடை மூலம் ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்கரையில் உள்ள முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலின் சுற்றுப் பகுதியில் புதிய கற்காலக் கற்கோடரி, தானியங்களை அரைக்க பயன்பட்ட அரைப்புக்கற்கள், கவண்கல், குறியீடு உள்ள பானை ஓடுகள்,மட்பாத்திரங்களை வைப்பதற்குரிய பானைத் தாங்கிகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள்,சிவப்பு நிற பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், நெசவுத்தொழிலுக்குப் பயன்படும் தக்களி, வட்டச் சில்லுகள், சுடுமண் கெண்டியின் உடைந்தபகுதி, கைப்பிடி, மான் கொம்பு, இரும்பு தாதுக்கள், இரும்புக்கழிவுகள், இரும்புக் கத்தியின் முனைப்பகுதி ஆகியவற்றை கண்டெடுத்துள்ளோம்.
புதிய கற்காலம்
புதிய கற்காலம் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினான்.
போகலூரில் கிடைத்த கற்கோடரி புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. இதன் நீளம் 7 செ.மீ. அகலம் 5.5 செ.மீ. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். இதன் மேல்பகுதியில் சிறு சிறு துளைகள் உள்ளன. இது அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இதன் அகன்ற வெட்டும் பகுதி கூர்மையானதாகவும், குறுகிய பகுதி கூர்மை குறைந்தும் உள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள்.
இரும்புக்காலம்
புதிய கற்காலத்தை அடுத்த பெருங்கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் கூறுவார்கள். இங்கு இரும்பு சார்ந்த பல பொருள்கள் கிடைத்திருப்பதால் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறையை அறிந்திருந்தனர் என அறியமுடிகிறது. பானை ஓடுகளில், வழுவழுப்பானவை சொரசொரப்பானவை என இருவகைகள் உள்ளன. சிவப்பு நிற பானைகளின் வெளிப்பகுதியில் வண்ணம் பூசப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது.
குறியீடு உள்ள பானை ஓடுகள்
ஒரு கருப்பு சிவப்பு பானை ஓட்டில் 'த' என்னும் தமிழ் பிராமி எழுத்து போன்ற குறியீடும், மற்றொன்றில் திரிசூலக் குறியீடும் உள்ளன. இவை 2000 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்தவை.
கவண்கல்
வேட்டைக்கும், பாதுகாப்புக்கும் பயன்பட்ட ஒரு இன்ச் விட்டமுள்ள வட்டமான கவண்கல் இங்கு கிடைத்துள்ளது. இது புதிய கற்காலம் முதல் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.
தொல்பொருள்கள்
இங்கு கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில், வழுவழுப்பானவை சொரசொரப்பானவை என இருவகைகள் உள்ளன. சிவப்பு நிற பானைகளின் வெளிப்பகுதியில் வண்ணம் பூசப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது. பானை ஓடுகளை தேய்த்து வட்டமாக்கி சிறுவர் சிறுமியர் விளையாடப் பயன்படுத்தும் சிறியதும் பெரியதுமான 8 சில்லுகள் கிடைத்துள்ளன.
வட்டச்சில்லின் நடுவில் துளையிட்டு பஞ்சை நூலாக்க நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்தும் ஒரு தக்களி கிடைத்துள்ளது. சுடுமண் கைப்பிடி தேரிருவேலியில் கிடைத்தது போன்று பெரியதாக உள்ளது. இது பெரிய மட்பாத்திரங்களோடு இணைக்கப்பட்டு தூக்குவதற்கு பயன்பட்டிருக்கலாம். மட்பாத்திரங்களை வைப்பதற்குப் பயன்படுத்திய சிவப்பு, கருப்பு நிறங்களிலான பானைத்தாங்கியின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளன.
இங்குபுதிய கற்காலக் கருவியோடு இரும்புக்கால, சங்ககால பானை ஓடுகளும் கிடைப்பதன் மூலம் புதிய கற்காலம் முதல் சங்ககாலம் வரை பல ஆயிரம் ஆண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியாக இது விளங்கியுள்ளதை அறியமுடிகிறது. புதிய கற்காலக் கருவிகள் பிற்காலத்திலும் ஏதோ ஒருவகையில் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
புதிய கற்காலக் கருவிகள், வட தமிழ்நாட்டில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழ்நாட்டில் சமயநல்லூர், கீழடி உள்ளிட்ட ஒருசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.
புதிய கற்காலக் கருவி தென்மாவட்டங்களில் மிகஅரிதாகவே கிடைப்பதால் இதன் பழமையை மேலும் தெரிந்துகொள்ள இப்பகுதியில் தொல்லியல் துறை அகழாய்வு செய்ய வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago