வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நீட்டிப்பு
குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, இறப்பு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் ஆகியவற்றால் ஏற்படும் குழப்பங்களைப் போக்கும் வகையில் நீண்ட நாள் போராட்டத்துக்குப்பின் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

கடந்தாண்டு ஆக.1-ம் தேதி ஆதார் இணைப்புக்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. வாக்காளர் பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுவீடாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்றனர். அத்துடன் ‘கருடா’ என்ற செயலியிலும் ஆதார் தகவல்களைப் பதிவு செய்தனர்.

இதுதவிர, ஆன்லைனிலும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே மத்திய சட்டத்துறையின் சார்பில் கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு அதாவது அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடந்த 10 நாட்களுக்கு முன், சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. ஏற்கெனவே கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் இணைப்புக்கான விண்ணப்பிக்கும் நடவடிக்கை முடிந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 68.75 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதாவது மொத்தம் உள்ள 6.20 கோடி வாக்காளர்களில் 4.21 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், அரியலூரில் 99 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 93.91 சதவீதம், நாகப்பட்டினத்தில் 87.49 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 32, கோயம்புத்தூரில் 48.34, செங்கல்பட்டில் 53.50 சதவீதம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், ஆதார் - வாக்காளர் பட்டியல் இணைப்பு பணியை தேர்தல் ஆணையம் இதுவரை தொடங்கவில்லை. இதற்கான அறிவிப்பும் வரவில்லை. அதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE