திருநெல்வேலி எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியான பாலாஜி சரவணனுக்கு, திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம், திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக இருந்துவரும் சரவணன் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்படுகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளரான பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது.

நாளிதழில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்தச் சம்பவம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் வரும் ஏப்ரல் 3ம் தேதி மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. பல்வீர் சிங் விவகாரத்தில் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE