“சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலா, வந்தே ‘இந்தி’ ரயிலா?” - சு.வெங்கடேசன் எம்.பி கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை எம்பி, சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வந்தே பாரத் ரயிலா? வந்தே "இந்தி" ரயிலா? சீனியர் லோகோ பைலட்களையே புதிய ரயில் துவங்கும் போது பணியமர்த்துவது வழக்கம். ஆனால் பிரதமர் பங்கேற்கும் சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவு.

இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிப்பு. சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் மார்ச் 30ம் தேதி நடைபெற்றது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரயில், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்கள் வழியாக காலை 11.18 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர், கோவையில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு இந்த ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது.

சென்னையிலிருந்து 5 மணி நேரம் 38 நிமிடங்களில் இந்த ரயில் கோவை வந்து சேர்ந்தது. ரயில்வே அட்டவணையில் இந்த ரயில் கோவை வந்து சேர 6 மணி நேர இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பராமரிப்புப் பணிகள் கோவையில் உள்ள பணிமனையில் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இதுவாகும். தென்னிந்தியாவின் இரண்டாவது 'வந்தே பாரத்' ரயில் இது. முதல் ரயில் சென்னை - மைசூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE