மகளிர் மதிப்புத் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அஞ்சல் துறைக்கு ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மகிளா சம்மான் திட்டத்தை மகளிர் மதிப்பு திட்டம் என மொழிபெயர்த்து தமிழக, புதுச்சேரி பெண்களிடம் கொண்டு செல்ல அஞ்சல் துறைக்கு ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பை ஊக்குவிக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக சேமிப்பு கணக்கை பெற்றோர்கள், பாதுகாவலர் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 59 ஆயிரத்து 690 சேமிப்பு கணக்குகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு புத்தகம் வழங்கும் விழா மற்றும் வெளிநாடு ஏற்றுமதியை எளிதாக்க அஞ்சல் வழி ஏற்றுமதி மையம் தொடக்க விழா இன்று நடந்தது. விழாவில் ஏற்றுமதி மையத்தை திறந்து வைத்து, சேமிப்பு கணக்குகளை பெண் குழந்தைகளிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.

இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியதாவது: "நவீன யுகத்தால் கடிதம் எழுதும் பழக்கத்தை தொலைத்துவிட்டோம். மனநல மருத்துவரிடம் சென்றால் கூட கஷ்டங்களை எழுதுங்கள் என்றுதான் சொல்வார்கள். அப்படி எழுதினால் பாதி கஷ்டம் தீர்ந்து விடும். தற்போதுள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் அன்பு தோய்ந்த கடிதங்கள் கிடைப்பதில்லை.மீண்டும் கடிதம் எழுதும் பழக்கத்தை இளைஞர்களிடம் துாண்ட வேண்டும். அஞ்சல் துறை கடிதம் எழுதும் இயக்கத்தை தொடங்க வேண்டும்.

ஒரு காலத்தில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தால் கஷ்டம் என நினைத்தனர். ஆனால் இன்று பிரதமரின் தொலை நோக்கு பார்வையால் செல்வ மகள் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம், மேற்படிப்புக்கான பணம் பெற்றோரால் சேமிக்க முடிகிறது.

மகிளா சம்மான் என்ற திட்டமும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களுக்கான மகளிர் மதிப்புத் திட்டம் என மொழிபெயர்க்கலாம். அஞ்சல் துறையினர் தமிழில் மொழி பெயர்த்து இத்திட்டத்தை தமிழகம், புதுச்சேரி பெண்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். இத்திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு லட்சம் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவரகளுக்கு 7.5 % வட்டி வழங்கப்படுகிறது" என்று ஆளுநர் கூறினார்.

விழாவில் தலைமை செயலர் ராஜீவ் வர்மா, தமிழ்நாடு வட்ட தலைமை தபால் அதிகாரி சாருகேசி, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன், இயக்குனர் சோம சுந்தரம், புதுவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் துரைராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE