விருதுநகர் | நிதி உதவியால் நவீனமயமான அரசுப் பள்ளி: தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: தனியார் நிதி உதவியுடன் விருதுநகர் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளுடன் நவீன மயமாக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே உள்ளது பட்டம்புதூர். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 207 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவ, மாணவர்களிடையே கல்விக் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், பள்ளிக்கு ஆர்வத்துடன் மாணவர்களை வரத் தூண்டும் வகையிலும் இப்பள்ளி நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளி சுற்றுச் சுவர்களில் வண்ண விளக்க ஓவியங்களுடன் திருக்குறள், சுவர்களில் நன்னெறி பதிவுகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், வகுப்பறைக்குள் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வண்ண கணினி, ஆய்வகம், சூரியக் குடும்பம் போன்ற முப்பரிமான ஓவியங்கள் மட்டுமின்றி, வன விலங்குகள் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. அதோடு, வகுப்பறைகளின் வெளிப்புறத்தில் ரயில் பெட்டிகள் போன்ற ஓவியமும் காண்போரை வியக்கச் செய்கிறது.

மேலும், பள்ளி வளாகத்தில் செயற்கை நீரூற்று, அடிகுழாயுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டி, நவீன சமையற் கூடம், நவீன அறிவியல் ஆய்வகம், மாணவிகளுக்கான சுகாதார ஆய்வகம், உணவருந்தும் இடம் அருகே கைகழுவும் குழாய்கள் அமைப்பு, பல்வேறு வகையான பழ மரக்கன்றுகள் உள்ள தோட்டம் என பள்ளியின் நவீன மயம் நீள்கிறது.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் திருசெல்வராஜா கூறுகையில், அரசுப் பள்ளியாக இருந்தாலும் அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டோம். இதற்காக, இதற்கான செலவுகளை ஏற்க பல்வேறு தனியார் அமைப்புகளை நாடினோம். அதன்படி, வேல்டு விஷன் மற்றும் தனியார் பவுன்டேஷன் அளித்த ரூ.18 லட்சத்தில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாணவர்கள் பள்ளிக்கு விருப்பத்துடன் வர வேண்டும். ஆர்வத்துடன் புரிந்து, படிக்க வேண்டும். ஆய்வகம், செய்முறைத் தேர்வு போன்றவற்றைப் பார்த்து பயம்கொள்ளக் கூடாது. மாதவிடாய் காலத்தில் மாணவிகளின் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பள்ளி வளாகத்தை பசுமையாகவும், தூய்மையாகவும் பேணிப் பாதுகாக்க இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE