பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்களே 'திராவிட மாடல்' ஆட்சியின் அடித்தளம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: பெண்கள் மேம்பாட்டிற்காக திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களே திராவிட மாடல் ஆட்சியின் அடித்தளமாக விளங்குகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பல்நோக்கு சேவை மைய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மேயர் சங்கீதா, ஒன்றிய குழுத் தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து, 287 பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ராஜலட்சுமி திட்டங்கள் குறித்து பேசினார்.

விழாவில் எம்எல்ஏ அசோகன் பேசுகையில், 'விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி பகுதிக்கு விவசாய கடன் குறைவாகவே வழங்கப்படுகிறது. சிவகாசியில் விளை பொருட்களை சேமித்து வைப்பதற்கு குளிர் பதன கிடங்கு வசதி இல்லை. சிவகாசி தொகுதியில் வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எம்எல்ஏ கூறினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், 'அரசின் அங்கமாக பல்வேறு துறைகள் இருந்தாலும் விவசாயிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வரப்பிரசாதமாக இருப்பது கூட்டுறவு துறை தான். அரசு துறைகள் அனைத்தும் லாப நோக்கமின்றி சேவை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் ஈட்டும் லாபம் மீண்டும் மக்களுக்கே மானியமாக, கடனாக வழங்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கூட்டுறவு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது தான் மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்டது. 2006 -2011 ஆண்டுகளில் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கப்பட்டது. தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக அத்துறை அமைச்சர் உதயநிதி இடம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முதன் முதலாக விளை பொருட்களை சந்தை படுத்துவத்தற்கான பல்நோக்கு சேவை மையம் திருத்தங்கலில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும். மகளிர்க்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழகும் அறிவிப்பை வெளியிட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியவர் முதல்வர் ஸ்டாலின். பெண்கள் சுய சார்புடன், தலை நிமிர்ந்து இருக்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது.

அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் மகளிர் நலன் சார்ந்தே அறிவிக்கப்படுகிறது. பெண்கள் மேம்பாட்டிற்கு திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியின் அடித்தளமாக விளங்குகிறது" என அமைச்சர் கூறினார். இந்நிகழ்வில் சிவகாசி வட்டார உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் புதிதாக தொடங்கப்பட்டது. துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஒன்றிய குழு துணை தலைவர் விவேகன் ராஜ், மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE