அதிமுக - பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் தேசியத் தலைவர்கள்தான் - இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சேலம்: கூட்டணி தொடர்பான முடிவை பாஜக தேசியத் தலைமையே எடுக்கும். மாநிலத் தலைமை அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டணி பற்றி பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தலைவர்களால் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாது. அதிமுக - பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் டெல்லியில் உள்ள தேசியத் தலைவர்கள்தான். டெல்லியில் உள்ள தலைவர்கள் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என ஏற்கனவே சொல்லிவிட்டனர்" என்றார்.

முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது.. சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பாஜகவின் வளர்ச்சி, 2024 மக்களவைத் தேர்தல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்து அண்மையில் நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன். அகில இந்தியத் தலைவர்கள் தான் இந்தக் கூட்டணியை முடிவு செய்துள்ளனர். மாநிலத் தலைவராக நான் எனது கருத்தை மட்டுமே அமைச்சர் அமித் ஷாவிடம் முன்வைத்தேன். அவர் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது எனக் கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை.

கூட்டணி என்றால் அதில் தொகுதி பங்கீடு, கொள்கை என நிறைய விஷயங்கள் உள்ளன. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியம் கிடையாது. அரசியல் கூட்டணி எல்லாம் தண்ணீர் போன்றது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது கூட்டணி குறித்து இப்போதே முதலுரையும், முடிவுரையும் எழுத முடியாது" என்று கூறியிருந்தார்.

கூட்டணி வலிமையாக இருக்கிறது.. முன்னதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன், "பாஜக - அதிமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. இந்த கூட்டணி தொடரும். நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல. அவரது கருத்தை அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது கர்நாடகா தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறோம். தொடர்ந்து, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தலில் கவனம் செலுத்துவோம். மக்களவைத் தேர்தலில் தேசிய தலைமை வழிகாட்டுதல்படி பணிகள் நடைபெறும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அந்தக் கருத்து அடிக்கடி அதிமுக - பாஜக கூட்டணி பற்றி சர்ச்சைக் கருத்துகளை முன்வைத்துவரும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE