13 குழந்தைகளை பெற்ற தந்தைக்கு குடும்ப கட்டுப்பாடு - விழிப்புணர்வு இல்லாததால் ‘போராடிய’ மருத்துவக் குழுவினர்

By செய்திப்பிரிவு

ஈரோடு: அந்தியூர் அருகே 13 குழந்தைகளைப் பெற்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த தந்தைக்கு, பெரும் போராட்டத்துக்குப் பின்னர், மருத்துவக் குழுவினர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஒன்னகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன மாதையன்(46). பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்,விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (42). இந்த தம்பதிக்கு 12 குழந்தைகள் உள்ளனர்.

13-வதாக பிறந்த ஆண் குழந்தை: சாந்தி மீண்டும் கருத்தரித்த நிலையில், அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு 3 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த 13 குழந்தைகளும் வீட்டிலேயே பிரசவமாகியுள்ளன.

இந்நிலையில், 13-வது குழந்தையைப் பரிசோதிக்க, அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், காவல் துறை, தன்னார்வலர்கள் குழு ஒன்னகரை கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர். குழந்தையின் உடல்நலனைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், தாய் சாந்தியைப் பரிசோதித்தனர். இதில் அவருக்கு ரத்த சோகை பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக அவருக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதனால், அவரது கணவரான சின்ன மாதையனுக்கு ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ய மறுத்த சின்ன மாதையனிடம், மீண்டும் கர்ப்பம் தரித்தால் ஏற்படும் பக்கவிளைவுகளை மருத்துவக் குழுவினர் விளக்கினர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் சம்மதித்தார்.

நவீன கருத்தடை சிகிச்சை: அவரை, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து,ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அதன்பின், ஆம்புலன்ஸ் மூலம் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவக் குழுவினர் கூறியதாவது: கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, சாந்திகர்ப்பமடைந்த தகவல் அறிந்ததும், அவரை மருத்துவக் குழுவினர் அணுகி, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த சின்ன மாதையன் -சாந்தி தம்பதி, அடுத்தடுத்த முறை மருத்துவக் குழுவினர் சென்ற போதெல்லாம், வனப்பகுதிக்குள் சென்று பதுங்கிக் கொண்டு, அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது சின்ன மாதையனை சம்மதிக்க வைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தவறான புரிதல்கள்: ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்வதால், ஆண்மை குறைபாடு ஏற்படும் என தவறான புரிதல் உள்ளது. மேலும், பழங்குடியினர் மக்களிடையே போதியவிழிப்புணர்வு இல்லாததன் காரணமாக, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெறும் பெண்கள், உடல்நலக்குறைவுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து இந்தப் பகுதி மக்களிடம் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை, மருத்துவக் குழுவினர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE