ஏப்.11-ல் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்: ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு முடிவு

By செய்திப்பிரிவு

திருச்சி: தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்விதமாக ஏப்.11-ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தாஸ் மற்றும் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நிரந்தர அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் ஊதியம் வாங்குவதாகவும், தொகுப்பூதிய பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் வாங்குவதாகவும், எனவேதான் அவுட்சோர்சிங் நியமனங்களை முன்னெடுப்பதற்கு முன்மொழிவதாக தமிழக முதல்வர் முன்னிலையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.7, 8, 9 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ளஎம்.பி, எம்எல்ஏக்களை சந்தித்துகோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தை நடத்துவது.

வாழ்வாதார கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், ஏப்.11-ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஜாக்டோ ஜியோவுடன் இணைந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து துறை சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE