மதுரை - நெல்லை இருவழிப்பாதை பணிகள் நிறைவு: புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படுமா?

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: மதுரை- திருநெல்வேலி ரயில்வே வழித்தடம் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் மதுரை - புனலூர் பயணிகள் ரயிலை வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகிறார்கள்.

மதுரை – புனலூர் ரயில் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட மிகவும் குறைவாக 410 கி.மீ தூரம் மட்டுமே பயணிக்கிறது. இதில் 139 கி.மீ கேரளத்திலும், 272 கி.மீ தமிழகத்திலும் பயணம் செய்கிறது. இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு, கட்டணம் அதிகரிப்பு காரணத்தால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

ஆகவே அனைத்து விதமான பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி, திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதன்மூலம் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி செல்லும் அனைத்து பயணிகளும் இந்த ரயிலில் பயணம் செய்வார்கள். ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று ரயில் பயணிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி எட்வர்ட் ஜெனி கூறியதாவது: இந்த ரயில் மதுரை – விருதுநகர் பகுதிகளில் இருமார்க்கங்களிலும் மற்ற அதிவிரைவு ரயில்களுக்காக பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டு மெதுவாக பயணம் செய்து அதிகாலை மதுரை சென்றடையும். தற்போது இருவழிப்பாதை பணி நிறைவு பெற்றுவிட்டது.

இதனால் கிராசிங் என்று இந்த ரயிலை நிறுத்தி வைக்க வேண்டிய தேவையில்லை. ஆகையால் இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லை.

மேலும் தென் மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. எனவே, இந்த ரயிலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE