தமிழகத்தில் கூடுதலாக உள்ள 37 சுங்கச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: அன்புமணி

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தமிழ் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்கத் தலைவர் புதா அருள்மொழி, மாநில பொருளாளர் திலக பாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழ் பெயர் பலகைகளை அமைக்க கூறும் துண்டறிக்கைகளை அந்தந்த பகுதியில் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்காமல் லிக்னைட் எடுப்பதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பகுதியிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு அடுத்த வடசேரி பகுதியிலும் மத்திய அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்காக அந்தப் பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரியவில்லை. நெய்வேலியில் நிலக்கரி எடுத்ததால் அந்தப் பகுதியில் நீர்நிலைகளும், வேளாண்மையும் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாமல் என்எல்சி நிர்வாகத்துக்கு துணையாக நிற்கிறார். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். அவர் ஆட்சியராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர்.

சுங்க சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்கும், மற்றவை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பார்த்தால் 37 சுங்க சாவடிகளை அகற்றி இருக்க வேண்டும். இதுவரை அகற்றப்படவில்லை. போக்குவரத்துத் துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோர் நீதிமன்றத்திற்குச் சென்று உடனடியாக 37 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு வெப்பமான ஆண்டு. அதற்கு ஏற்ற முறையில் மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும், கோவிட் (கரோனா) பரவல் குறித்து பயப்படத் தேவையில்லை. கடந்த 10 மாதங்களில் 98 சதவீதம் மக்களுக்கு ஒமிக்கிறான் தொற்று பரவியதால் எதிர்ப்பு சக்தி உள்ளது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்கு அறிக்கை அளித்துள்ளேன். விரைவில் நிரப்புவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதிப்பார்கள். தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாக புழங்குவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையால் தான் அதிகமாக குற்றங்கள் நடைபெறுகின்றன" என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE