விடுதலை படம் வெளியான திரையரங்கில் போலீஸாரோடு வாக்குவாதம்: பெண் மீது வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: ’ஏ’ சான்றிதழ் பெற்ற ’விடுதலை’ படத்தைப் பார்க்கச் சிறுவர்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதியும் சூரியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். படம் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த படம் ஓடிக்கொண்டிருந்த போது, காவல் துறையினர் படத்தை பாதியில் நிறுத்தி 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறினர். மேலும் மற்றவர்கள் வெளியே செல்லுமாறு தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் போலீஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வளர்மதி என்ற பெண், வன்முறை காட்சிகள் உள்ளதால் தான் ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சிறுவர்களை வெளியே அனுப்ப முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, வளர்மதி மீது பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல் உட்பட 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE