சென்னையில் சாலைப்பணிகள் - நள்ளிரவில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் இறையன்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகளும், நகர்ப்புர உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.32 கிலோமீட்டர் நீளத்தில் 300 சாலைகளும், நகர்ப்புர உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோமீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறசாலைகள் உட்பட 1157 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சாலைப் பணிகளை கண்காணிக்க ஆணையர் தலைமையில் அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (ஏப்.1) இரவு 11 மணிக்கு தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 35க்குட்பட்ட, முத்தமிழ் நகர் தெற்கு அவென்யூ சாலையில் ரூ.13.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்ச் சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, திரு.வி.க நகர் மண்டலம், வார்டு 70-க்குட்பட்ட இளங்கோ தெருவில், ரூ.6.98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச் சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஏற்கனவே போடப்பட்ட சாலை அகழ்ந்தெடுக்கப்பட்டதையும், அதன் ஆழத்தையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், புதிதாக போடப்படும் சாலை, அதன் மேல் உருளை இயந்திரத்தினால் அழுத்தம் ஏற்படுத்துவதையும், சாலை அளவினையும், தார்க்கலவையின் தரத்தினையும், சாலையின் நடுவிலிருந்து ஓரத்திற்கான சாய்வு அளவினையும் ஆய்வு செய்து, சாலைகளை உரிய அளவுகளின்படியும், சரியான தரத்திலும் அமைப்பதை உறுதி செய்திடவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலை பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE