பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை | விழுப்புரத்தில் கடையடைப்பு, சாலை மறியல்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்/சென்னை: விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியரை கடையில் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து, வணிகர்கள் நேற்று கடையடைப்பு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹீம்(45), எம்.ஜி. சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தபோது, ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த ஞானசேகர் மகன்களான ராஜசேகர் (33), வல்லரசு (23) ஆகியோர் அந்த கடைக்குள் புகுந்து தகராறு செய்தனர்.

இதை இப்ராஹீம் தட்டிக்கேட்டார். இதில் ஆவேசமடைந்த இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். முண்டியம்பாக்கம் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஞானசேகர், அந்த பல்பொருள் அங்காடியின் முன்பு நடைபாதையில் பழக்கடை வைத்துள்ளார்.

இக்கொலையை கண்டித்து விழுப்புரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் நேற்று மாலை 4 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் வணிகர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இவ்விவகாரத்தில் அரசுக்கு தவறான தகவல்களை அளித்ததாக காவல்துறை மீது குற்றம்சாட்டி வணிகர்கள் விழுப்புரத்தின் மையப்பகுதியான சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். எம்.ஜி சாலை, விராட்டிக்குப்பம் பகுதி புறவழிச் சாலையிலும் மறியல் நடந்தது.

இந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, ‘‘ராஜசேகர், வல்லரசு ஆகியோர், கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது’’ என்றார். இதே கருத்தை வலியுறுத்திய மயிலம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் சிவக்குமார், ‘இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்’ என்றார்.

முதல்வர் விளக்கம்: இவற்றுக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஞானசேகருக்கு வேறோரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தைக் குடும்பத்துக்குத் தருவதில்லை என்றும் அவரது மனைவியான சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மார்ச் 29-ம் தேதி மாலை, ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கேட்க பழக்கடைக்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லாததால், அங்கிருந்தவர்களிடம் கேட்டு பிரச்சினை செய்திருக்கின்றனர். அப்போது அப்பிரச்சனையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை இருவரும் கத்தியால் குத்தி, காயம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. காயம்பட்ட இப்ராஹிம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட தகராறின்போது, தடுக்க வந்த நபர், துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரிழந்திருக்கக் கூடிய சம்பவம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE