நெய்வேலி என்எல்சியிலிருந்து புதுச்சேரிக்கு குடிநீர்; 2 நாட்களில் முடிவு தெரியும்: அமைச்சர்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: நெய்வேலி என்எல்சியிலிருந்து புதுச்சேரிக்கு தினமும் 10 எம்எல்டி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரும் திட்டத்தில் இரண்டு நாட்களில் முடிவு தெரியும் என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்ட அறிவிப்புகள்: "புதுச்சேரியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி என்எல்சி கடலூருக்கு செயல்படுத்துவது போல் புதுச்சேரிக்கும் செயல்படுத்தக் கோரியுள்ளோம்.

அதன்படி சுத்திகரிக்கப்பட்ட நீரை புதுச்சேரி நகரின் குடிநீர் தேவையை தீர்க்க திட்டமிட்டுள்ளோம். சுமார் 10 எம்எல்டி தண்ணீரை தினமும் கொண்டு வரவுள்ளோம். இரண்டு நாள்களில் இதன் முடிவு தெரியவரும். குழாய்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நகரப்பகுதிக்கு கொண்டு வருவோம். தண்ணீர் தட்டுப்பாடு குறையும்.

புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதிகளில் 67 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் பல குடிநீர் கேன்கள் விற்பனை இல்லாததால்
பயன்பாடு குறைந்துவிட்டது. கடலோரமாக உள்ள நிலத்தடி நீர் அபாய பகுதிகளில் சிவப்பு ரேஷன் அட்டைத்தாரருக்கு தினமும் 20 லிட்டர் குடிநீர் கேன் இலவசமாக தரப்படும்.

அதுபோக மீதியுள்ள தண்ணீரை வணிக நிறுவனங்களுக்கு நியாயமான விலையில் தருவோம். கிழக்கு கடற்கரை சாலை 100 அடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து அரும்பார்த்தபுரம் வரை புதிய புறவழிச்சாலை ரூ. 22.94 கோடியில் பணிகள் ஆரம்பித்துள்ளோம். அடுத்தாண்டு மார்ச்சில் முடிக்கப்படும்.

கிழக்கு கடற்கரைச் சாலை ஏர்போர்ட் சாலை சந்திப்பில் தொடங்கி ராஜீவ் காந்தி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம் வரையிலான மேம்பால ஆய்வுப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் நிதியாண்டில் ரூ. 440 கோடியில் கட்டுமானப்பணிகள் வரும் ஜூனில் ஆரம்பிக்கப்படவுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு கட்ட்டங்கள், வீடுகளில் அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

அதற்கு அரசு கட்டடங்களுக்கு ரூ. 9 கோடி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை செறிவு செய்ய அனைத்து அரசு கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைக்க வலியுறுத்தப்படும். அவ்வாறு அமைக்காத வீடுகளுக்கு, கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தேசித்துள்ளோம்" என அமைச்சர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE