போலீஸால் சுடப்பட்டவருக்கான சிகிச்சை குறித்து தெளிவற்ற ஆவணம்: உயர் நீதிமன்றத்தில் கோவை காவல் ஆணையர் ஆஜர்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: காவல் துறையினரால் சுடப்பட்டவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தெளிவற்ற ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மதுரையை சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் சஞ்சய்ராஜாவின் காலில் குண்டடிப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர், சஞ்சய் ராஜாவுக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் எனக் கூறி, தெளிவில்லாத இரண்டு பக்க நகலை நீதிபதிகளிடம் வழங்கினார். அந்த நகலைப் பார்த்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆய்வாளருக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், சஞ்சய் ராஜாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முறையான அறிக்கையை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர். கடலூர் சிறையில் உள்ள சஞ்சய் ராஜாவை அவரது தரப்பு வழக்கறிஞர் செவ்வாய்க்கிழமை சந்திக்க அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அவரிடம், ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணத்தை பார்த்ததாக தெரிவித்த ஆணையர் பாலகிருஷ்ணன், இனி இதுபோன்ற செயல் நடைபெறாது என உறுதி அளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடலூர் சிறைக்கு சென்று சஞ்சய் ராஜாவை பார்த்ததாகவும், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ், முறையான சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறினார்.

இதனையடுத்து தற்போது வழங்கப்படும் சிகிச்சையை தொடர உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்