விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் | அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி சஸ்பெண்ட்; முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 29) தெரிவித்தார்.

அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறைக்கு இவர் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, பற்களை பிடுங்கி தண்டனை அளிக்கும் ஏஎஸ்பி, கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்குப் பதில் அளித்த முதல்வர்,"அம்பை ஏஎஸ்வி விவகாரத்தில் புகார் வந்த உடனேயே விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடனடியாக அந்த ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்த உடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவை எல்லாம் சம்பவம் நடத்த உடனே இந்த அரசு எடுத்த நடவடிக்கை." என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE