கிளைச் செயலாளர் முதல் பொதுச் செயலாளர் வரை... - அதிமுகவில் இபிஎஸ் கடந்து வந்த பாதை

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 1954-ம் ஆண்டு சேலம் அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தார். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், ஆரம்ப காலத்தில் வெல்லம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

தனது 18-வது வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் 1972-ம் ஆண்டு அதிமுகவில் தொண்டராக இணைந்தார். அயராது ஆற்றிய பணியால் 1973-ல் அவருக்கு சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் பதவி கிடைத்தது.

1989-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் இருந்தார். 1989-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவைக்குச் சென்றார்.

அதன்பின்னர், அவரது பெயருக்கு முன்பு எடப்பாடி சேர்ந்து எடப்பாடி பழனிசாமியாக பிரபலமானார். 1991-ல் மீண்டும் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 1996, 2006-ல் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2011, 2016-ல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருமுறையும் அமைச்சரானார். 1998-ல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். கட்சியிலும் மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் கொள்கை பரப்புச் செயலாளர் என கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

2017-ம் ஆண்டு பிப்.16-ம் தேதி தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார். 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்கட்சித் தலைவராக பழனிசாமி பதவியேற்றார். தொடர்ந்து, கட்சியின் இரட்டை தலைமையை தன்னுடைய ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி தற்போது உயர்ந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமிக்கு, எம்ஜிஆர் போல் தொப்பி, கூலிங் கிளாசை தொண்டர் ஒருவர் அணிவித்தார்.

> அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார். | வாசிக்க > பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியேற்பு - அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

> அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள், நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். | வாசிக்க > பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு - அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE