ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களான ஹரீஷ், மாலதியை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்த விவகாரத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்களான ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற காவலில் உள்ள இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி கருணாநிதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி வாதிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இயக்குனர் ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE